பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோவில் தேரோட்ட திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆனாங்கூர் மதுரா சாமி பேட்டையில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 1-ஆம் தேதி அம்மனுக்கு திருவிழா தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு காப்பு கட்டுதல், அம்மன் வீதி உலா, பூவால கப்பறையுடன் அம்மன் வீதி உலா, சக்தி கப்பறையுடன் அம்மன் வீதி உலா, மூன்று முகத்துடன் அம்மன் வீதி உலா போன்றவைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 5-ம் நாள் திருவிழாவில் வானவேடிக்கை, கோட்டைக்கு தீ வைத்தல், முத்துப்பல்லக்கில் அம்மன் வீதி உலா போன்ற நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. அதன்பிறகு அக்னி கரத்துடன் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
இதனையடுத்து அலங்கரிக்கப்பட்ட அம்மன் தேரில் வைத்து நகர நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மீண்டும் கோவிலை வந்தடைந்தார். இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு வடம் பிடித்து இழுத்தனர். இதனையடுத்து 18 கரங்களால் அலங்காரம் செய்யப்பட்ட ஆவேச அங்காளம்மனை மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றுள்ளனர். அதன்பிறகு மயானக்கொல்லை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை மற்றும் படையல் செய்யப்பட்டது. மேலும் பக்தர்கள் சிலர் அம்மன் போல் வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.