பிரபல கோவிலின் தேரோட்டத் திருவிழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கலந்து கொண்டார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் பிரசித்தி பெற்ற 108 வைணவத் திருத்தலங்களில் 4-வது தலமான சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பாக குலோத்துங்கச் சோழன் காலத்தில் கோவில் வளாகத்தில் திருத்தேர் வலம் வந்ததாக கல்வெட்டு குறிப்புகளில் இருக்கிறது. ஆனால் காலப்போக்கில் வெள்ளப்பெருக்கு காரணமாக தேர் மதில் சுவர்கள் சேதமடைந்து தேரோட்டம் நடைபெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் ரூபாய் 50 லட்சம் மதிப்பில் புதிதாக கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக புதிய தேர் சக்கரங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோவிலில் கடந்த மாதம் வெள்ளோட்டம் நடைபெற்றது. அதில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் கடந்த 4-ஆம் தேதி கோவிலில் புதிதாக கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு கொடியேற்றத்துடன் திருவிழா சிறப்பாக தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார். மேலும் தேரோட்டத் திருவிழாவில் அமைச்சர் உள்பட முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.