பிரசித்தி பெற்ற கோவிலின் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 5-ம் தேதி சிறப்பாகத் தொடங்கியது. அதன்பின் மறுநாள் பாரதம் ஆரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து ஒவ்வொரு நாளும் இரவில் சாமி வீதி உலா, கம்பம் நடுதல் நிகழ்ச்சி, அரவாண் பலி, கிருஷ்ணன் தூது, வெள்ளிக்கால் நடுதல், ராஜசூய யாகம், கூத்தாண்டவர் பிறப்பு, பாஞ்சாலி திருமணம், பகாசூரன் வதம், பாஞ்சாலி பிறப்பு, தர்மர் பிறப்பு, பீஷ்மர் பிறப்பு, சாந்தனு தரிசனம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அதன்பிறகு திருக்கண் திறப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது ஏராளமான திருநங்கைகள் கழுத்தில் தாலி கட்டிக் கொண்டனர். அதன்பின் திருநங்கைகள் விடிய விடிய ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களும் தாலி கட்டிக் கொண்டனர். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த தேரோட்டம் முடிவடைந்த பிறகு அரவாண் களப்பலி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் திருநங்கைகள் வெள்ளை நிற ஆடையை அணிந்து கொண்டு அழுவார்கள். மேலும் இந்த திருவிழாவை முன்னிட்டு காவலர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்