புகழ்பெற்ற கோவிலில் கொடியேற்றத்துடன் இன்று (புதன்கிழமை) பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக தொடங்க உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அருகில் அவலூர்பேட்டையில் பிரசித்தி பெற்ற வள்ளி தெய்வானை சமேத முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு 17-ஆம் தேதி ராமலிங்க சாமுண்டீஸ்வரி கோவிலில் இருந்து சக்திவேல் புறப்பாடு நடைபெறும். இதைத்தொடர்ந்து 18-ஆம் தேதி புஷ்பரத ஊர்வலமும், 19-ஆம் தேதி முத்துப்பல்லக்கில் சாமி வீதி உலாவும், 20-ம் தேதி தெப்பல் உற்சவமும் நடைபெறவிருக்கிறது.
இதனையடுத்து இடும்பன் பூஜையுடன் 21-ம் தேதி விழா முடிவடைகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு வானவேடிக்கை, கரகாட்டம், திருவருட்பா இசை நிகழ்ச்சி, தேசமங்கையர்கரசி சொற்பொழிவு நடைபெறும். மேலும் நடிகை கஸ்தூரி தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் மற்றும் பாடகர்கள் செந்தில் கணேஷ் ராஜலட்சுமியின் இன்னிசை கச்சேரியும் நடைபெறவிருக்கிறது.