திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் பங்குனி திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்த வருடம் கடந்த 14-ஆம் தேதியன்று பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கடந்த 20-ஆம் தேதி கோவிலின் முன்பு உள்ள மண்டகப்படியில் மாரியம்மன் சிம்ம வாகனத்தில் அருள்பாலித்தார். அதன்பின் மாரியம்மன் கோவிலில் இருந்து வாணவேடிக்கையுடன் நகர்வலம் தொடங்கியது. நிலக்கோட்டை நால்ரோடு, சௌராஷ்டிரா பள்ளி, மெயின் பஜார், பெரிய காளியம்மன் கோவில், நடராஜபுரம் தெரு வழியாக நகர்வலம் கோவிலுக்கு வந்து சேர்ந்தது.
இதையடுத்து அம்மன் கொலு மண்டபத்தில் பத்ரகாளியம்மன் மன்றம் மண்டகப்படியில் வீற்றிருந்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் கரும்பு தொட்டிலையும் வழிபட்டனர். இந்த மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவில் நிலக்கோட்டையிலிருந்தும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், இந்து நாடார் உறவின் முறை காரியதரிசிகள் பாண்டியராஜன், சுசீந்திரன், சுரேஷ்பாபு, ஜெயபாண்டியன் கருமலைப்பாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர்.