பிரசித்திபெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் ஒடுக்கு பூஜை நடைபெறவிருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு பகுதியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி திருவிழா கடந்த 27-ஆம் தேதி தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாசித் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், வில்லிசை, பஜனை, யானை மீது களப பவனி, அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், மாநாடு ஒன்று நடைபெற்றது. இதனையடுத்து கடந்த 6-ம் தேதி வலிய படுக்கை பூஜை சிறப்பாக நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து 9-ம் திருவிழாவில் பெரிய சக்கர தீவெட்டியில் அலங்கார பவனி வருதல், அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், அத்தாழ பூஜை, சாயரட்சை தீபாராதனை பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து இன்று அம்மனுக்கு ஒடுக்கு பூஜை நடைபெறவிருக்கிறது. இந்த பூஜையை முன்னிட்டு மண்டைக்காடு சாஸ்தா கோவிலில் இருந்து புனிதநீர் கொண்டுவருதல் நிகழ்ச்சி நடைபெறும். அதைத்தொடர்ந்து அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், அடியந்திர பூஜை, குத்தியோட்டம், சாயரட்சை பூஜை, சமய மாநாடு போன்றவைகள் நடைபெறவிருக்கிறது.