ரோப் கார் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்வதற்கு மலை அடிவாரத்தில் இருந்து யானை பாதை, படிப்பாதை, மின் இழுவை ரயில் நிலையம் மற்றும் ரோப் கார் போன்றவைகள் இருக்கிறது. இந்நிலையில் ரோப் காரில் செல்லும்போது நகரின் இயற்கை அழகுகளை ரசித்துக்கொண்டே செல்லலாம் என்பதால் பெரும்பாலான பக்தர்கள் ரோப்காரில் செல்வதற்கு விரும்புகின்றனர். இந்த ரோப் கார்களில் மாதத்திற்கு ஒரு முறை மற்றும் ஆண்டுதோறும் பராமரிப்பு பணிகள் நடத்தப்படும்.
அந்த வகையில் நடபாண்டிலும் கடந்த ஜூன் மாதம் பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டது. இதன் காரணமாக 45 நாட்களுக்கு ரோப் கார் சேவைகள் நிறுத்தப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த ரோப் கார்களில் சாப்ட்கள் தேய்மானம் அடைந்திருப்பதால், புதிய சாப்டுகளை பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த பணிகள் கூடிய விரைவில் முடிவடைந்து ரோப் கார் சேவை மீண்டும் தொடங்கும் என கோவில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரோப் காரில் பராமரிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்ததால் நேற்று மாலை பயன்பாட்டுக்கு வந்தது. இந்த பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பிறகு அதிகாரிகள் சோதனை செய்தனர். மேலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மக்களின் வசதிக்காக மீண்டும் ரோப் கார் சேவை தொடங்கியது.