தூத்துக்குடி உட்பட 8 மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பணியில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது
சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொலை சம்பவம் பூதாகரமாக வெடித்தது. இதனால் காவல்துறையினர் மீதான அவநம்பிக்கை மக்கள் மத்தியில் அதிகரித்து விட்டது. இதனைதொடர்ந்து மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்துவதற்காக காவல்துறையினர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொலை வழக்கில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்க்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆரம்பத்தில் காவல்நிலைய பணிகளுக்கும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்க்கும் சம்பந்தமில்லை எனக் கூறி இருந்தனர்.
ஆனால் தற்போது தூத்துக்குடி உட்பட எட்டு மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பணியில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் கரூர், பெரம்பலூர், திருச்சி, அரியலூர் புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் தற்காலிகமாக பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பணியில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா தெரிவித்துள்ளார். அதேபோன்று திண்டுக்கல், விழுப்புரம் மாவட்டங்களிலும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பணியில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது தூத்துக்குடியிலும் அவர்களது பணிக்கு தடை செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.