நடிகர் விஜய், நெல்சன் திலீப் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இந்த நிலையில், பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தளத்தின் அருகே, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி நடிக்கும் விளம்பர படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது. இதனை அறிந்த, தோனி பீஸ்ட் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று நடிகர் விஜயை சந்தித்து பேசினார்.
இருவரது சந்திப்பு குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், அதனை தல தோனியும் – தளபதி விஜயும் சந்திப்பு என இருவரது ரசிகர்களும் கொண்டாடி மகிழ்ந்தனர். இவற்றுக்கு ஒருபடி மேலாக சென்று மதுரையை சேர்ந்த விஜய் ரசிகள், ஆளப்போகும் மன்னர்களே என்ற தலைப்பில் மதுரை மாநகரம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டி அமர்க்களப்படுத்தினர்.
மதுரை வடக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒட்டப்பட்ட அந்த போஸ்டரில், தோனி பிரதமர் என்றும், விஜய் முதலமைச்சர் என்றும் குறிப்பிட்டு, ஆளப்போகும் மன்னர்கள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. நடிகர் விஜயை அரசியலுக்கு வர வழைக்கும் நோக்கில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.