மூன்று நாள் பயணமாக டெல்லி வந்துள்ள நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தூபா ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் இருநாட்டு உறவுகள் வளர்ச்சி, வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணியில் நேபாளத்தை இணைப்பது உட்பட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தியா – நேபாளம் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பீகாரின் ஜெய் நகரில் இருந்து நேபாளம் குர்தா வரையில் 794 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பயணிகள் ரயில் சேவையை பிரதமர் மோடியும், நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தூபாவும் திறந்து வைத்தனர்.
இதனை தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மோடி, நேபாளத்தில் அமைதி, வளம் மற்றும் வளர்ச்சிக்கான பயணத்தில் இந்தியா துணை நிற்பதாக தெரிவித்தார். மின்துறையில் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும், மின் ஒத்துழைப்பு குறித்த கூட்டு தொலைநோக்கு அறிக்கை எதிர்காலத்தில் ஒத்துழைப்பின் வரைபடமாக இருக்கும் என்றும் மோடி கூறினார். நேபாளத்தில் இருந்து மின்சாரம் இறக்குமதி செய்வதற்கான பல திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் ரூபே அட்டை அறிமுகமானது இந்தியாவின் நிதி இணைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தை சேர்க்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். அதேபோல் நேபாள பிரதமர் தூபா, கொரோனா காலகட்டத்தில் எங்களுக்கு முதல் தடுப்பூசி உதவி இந்தியாவிடமிருந்து கிடைத்தது. அதோடு மட்டுமில்லாமல் எங்களுக்கு இந்தியாவிடம் இருந்து கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கான மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், பிற தளவாட பொருட்களும் கிடைத்தன” என்று கூறியுள்ளார்.