நான்கு நாட்கள் பயணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். இந்த பயணத்தின் முக்கிய அம்சமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் அழுத்தமாக கூறியுள்ளேன்.
கர்நாடகத்துக்கு மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது, மதுரவாயல் உயர்மட்ட சாலையை ஸ்ரீபெரும்புதூர் வரை நீட்டிக்க வேண்டும் என்றும் மோடியிடம் வலியுறுத்தியுள்ளேன். இலங்கை தமிழர்களுக்கு மருந்து, உணவு உள்ளிட்டவை வழங்க அனுமதி தரவேண்டும், கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவரிடம் கூறியுள்ளேன்.
என்னுடைய கோரிக்கைகளை கேட்டறிந்த பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். அதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தமிழகத்திற்கான வெள்ள நிவாரணநிதி குறித்தும், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தமிழகத்தில் டிஆர்டிஓ ஆய்வு கூடம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்திள்ளேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.