கொரோனா காரணமாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை நாட்டில், பொதுமக்கள் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அரசுக்கு எதிராக முதலில் பொதுமக்கள், இளைஞர்கள் போராட தொடங்கிய நிலையில், தற்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் மக்கள் ஜனாதிபதி, பிரதமர் பதவி விலக வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். மேலும் பொதுமக்கள் இலங்கை நாடாளுமன்றம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கொழும்புவில் உள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் வீட்டின் முன்பாக பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு அங்கு போடப்பட்டுள்ளது.