இந்தியாவில் கார்டூன் உலகில் 50 வருடங்களாக முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் கே.ஆர்.லட்சுமணன். இவர் அரசியல்வாதிகளை தனது கார்ட்டூன் கதாபாத்திரத்தின் மூலம் தட்டி கேட்டார். அதாவது எளிய மக்களுக்கு எதிரான ஆட்சியாளர்களின், அதிகார வர்க்கத்தின் நடவடிக்கை களையும் அவர்களது ஊழலையும், மதவாதத்தையும் நகைச்சுவையுடன் விமர்சித்துக் கார்ட்டூன்கள் வரைந்து புகழ்பெற்றார். இவர் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லாவின் மிரட்டலுக்கு அஞ்சாமல் அவசரநிலை அடக்குமுறைகளை எதிர்த்து கார்ட்டூன்கள் வரைந்திருந்தார். வியட்நாம் நாட்டின் மீது ஏகாதிபத்திய அமெரிக்கா ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்தியபோது அதனை நையாண்டி செய்து அருமையான கார்ட்டூன் ஒன்று ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளேட்டில் வரைந்திருந்தார். கியூபா மீது அமெரிக்கா ‘மிஸைல்’ ஆயுதத் தாக்குதல் நடத்தியபோது அதை விமர்சித்து கார்ட்டூன் வரைந்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து புனேயில் முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் திறந்து வைத்த சாமான்ய மனிதனின் 10 அடி உயர வெங்கலச் சிலை உள்ளது. அதுமட்டுமில்லாமல் மும்பை ஓர்லி கடற்கரையில் எல்லோரையும் கவனித்தவாறு சிமெண்ட் பெஞ்சில் சாய்ந்து அமர்ந்திருக்கும் தோற்றத்தில் அவரது சாமான்யனின் மற்றொரு சிலையும் உள்ளது. ஒரு கார்ட்டூனிஸ்ட்டின் கதாபாத்திரத்துக்குச் சிலை வைத்தது உலகிலேயே இதுவாகத்தான் இருக்கும். டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையின் 150-ஆம் ஆண்டை முன்னிட்டு, அவரது அந்தச் சாமான்யனின் சித்திரத்துடன் மத்திய அரசு தபால் ஸ்டாம்ப் வெளியிட்டிருந்தது.இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் பி.டி.கோயங்கா விருது, இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் துர்கா ரத்தன் விருது, பத்திரிகைச் சேவைக்கான மகசேசே விருது, சிஎன்என்- ஐபிஎன் சானலின் விருது, கர்நாடக அரசின் கௌரவ விருது,பத்மபூஷண், பத்மவிபூஷண் விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன. மேலும் 60 ஆண்டுக் காலம் கார்ட்டூனிஸ்டாகப் பணியாற்றிய அவர் 2015 ஜனவரி 26 அன்று 93-வது வயதில் காலமானார்.