கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் சிட்கோவை பகுதியில் ரவிசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்து சில நாட்களுக்கு முன்பு ரவிசங்கரின் டெலிகிராம் முகவரிக்கு அமெரிக்க சுற்றுலா நிறுவனமான ஹயாத் என்ற பெயரில் ஒரு லிங்க் வந்தது. அதிலிருந்த செல்போன் எண்ணை ரவிசங்கர் தொடர்பு கொண்டு பேசியபோது மறுமுனையில் பேசிய நபர் எங்களது நிறுவனம் குறித்து கருத்துக்களை பதிவிட்டு பணத்தை முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.
இதனை நம்பி பல்வேறு தவணைகளாக ரவிசங்கர் 32 லட்சத்து 23 ஆயிரத்து 909 ரூபாயை அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். ஆனால் நீண்ட நாட்களாகியும் முதலீடு செய்த பணமோ, லாபமோ திரும்ப கிடைக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரவிசங்கர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பிரபல அமெரிக்க சுற்றுலா நிறுவனத்தின் பெயரில் மோசடி செய்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.