பிரபல ஜவுளிக் கடையில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் 2 கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாகியுள்ளன.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியின் அண்ணாசாலையில் பிரபல ஜவுளி கடை இயங்கி வருகிறது. இந்த ஜவுளிக்கடையில் நான்கு மாடி கட்டிடங்கள் கொண்டுள்ளதால் தமிழ் வருட பிறப்பான நேற்று வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் வியாபாரத்தை முடித்துவிட்டு இரவு 9 மணிக்கு மேலாக கடையை பூட்டிவிட்டு வேலையாட்கள் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற சற்று நேரத்திலேயே கடையிலிருந்து புகை வந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு துறை மற்றும் ஆற்காட்டிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆற்காடு, ராணிப்பேட்டை, சிப்காட், கலவை போன்ற பகுதிகளில் இருந்து தீயணைப்பு துறையினரை வரவழைத்து பற்றி எரியும் நெருப்பை தீவிரமாக அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தண்ணீர் பற்றாக்குறையால் விரைவில் தீயை அணைக்க இயலவில்லை. பின்னர் சம்பவ இடத்தில் இருந்த முக்கிய பிரமுகர்கள் மூலம் தண்ணீர் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 2 கோடி மதிப்பிலான துணிகள் மற்றும் பொருள்கள் எரிந்து சாம்பலானதாக தெரிகிறது.
மேலும் தீ விபத்துக்கு காரணம் மின்கசிவா இல்லை வேறு ஏதுமே என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தில் மற்ற அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக அப்பகுதியில் சற்று நேரம் போக்குவரத்தை போலீசார் நிறுத்தி வைத்தனர். அதன்பின் வாகன ஓட்டிகளை மாற்றுப்பாதையில் அனுப்பி வைக்கப்பட்டு போலிசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.