கடந்த இரண்டரை வருடங்களாக உலக நாடுகளில் தீவிர அச்சுறுத்தல் ஆக இருந்து வரும் கொரோனா தொற்று முதன் முறையாக 2019-ஆம் வருடம் சீனாவில் கண்டறியப்பட்டது. அதன் பின் கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகளை பிறபித்து பரவலை கட்டுப்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு சீனாவில் அதிகரித்து வருகிறது. கடந்த 26-ஆம் தேதி வரை மொத்தம் 3 லட்சத்து 7,802 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை முன்னிட்டு பல்வேறு மாகாணங்களில் கடுமையான ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ள அரசுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜின் ஜியாங் மாகாண தலைநகரான உரும்கி நகரில் குடியிருப்பு பகுதியில் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வருவதில் காலதாமதம் ஏற்படுத்தியது என ஊடக செய்தி வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தால் கொந்தளித்த மக்கள் கொரோனா கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலக கோரியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஷாங்காய் நகரில் நடைபெற்ற போராட்ட நிகழ்ச்சியை படம் பிடிக்க பிரபல தனியார் செய்தி சேனல் நிருபர் லாரன்ஸ் சென்ற போது அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து அவரை அடித்தும், உதைத்தும் போலீசார் சித்திரவதை செய்துள்ளனர். நம்பிக்கை வாய்ந்த பத்திரிக்கையாளர் மீது கொடூர தாக்குதல் நடைபெற்றுள்ளது என பிரபல தனியார் செய்தி சேனல் சார்பாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சீன அதிகாரிகளிடமிருந்து அதிகாரப்பூர்வமான விளக்கமோ அல்லது மன்னிப்போ இதுவரை எங்களுக்கு கூறப்படவில்லை. மேலும் எங்களது நிருபரை விடுவித்த அதிகாரிகள் பேசும் போது, கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்ற அவரது நலனுக்காகவே நாங்கள் நிருபரை கைது செய்தோம் எனக் கூறியுள்ளனர். ஆனால் அந்த பதிலில் நம்பகத்தன்மை இல்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.