கேரளத் திரை உலகில் பிரபலமான நடிகர் சுரேஷ் கோபி. இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவருக்கு மொத்தம் மூன்று சகோதரர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் நிலம் வாங்கி தருவதாக சொல்லி, தொழிலதிபரிடம் ரூபாய் 97 லட்சம் மோசடி செய்ததாக சுரேஷ் கோபியின் இரண்டாவது சகோதரர் சுனில்கோபியை கோவை போலீசார் தூக்கி சிறையில் அடைத்துள்ளனர்.
அதாவது, சுனில் கோபி கோவை நவக்கரை பகுதியில் மயில்சாமி என்பவரது 4.52 ஏக்கர் நிலத்தை முதலில் வாங்கியிருக்கிறார். அதற்கான பத்திரப்பதிவு நடைபெற்ற நிலையில் பத்திரப்பதிவு செல்லாது என்று கோர்ட் அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து நீதிமன்றத் தகவலை மறைத்து, சுனில் கோபி கோவை ஜி.என். மில்ஸ் பகுதியைச் சேர்ந்த கிரிதரன் என்பவருக்கு நிலத்தை விற்றிருக்கிறார்.
அந்த நிலத்திற்குதான் கிரிதரன் அட்வான்ஸ் ரூ.97 லட்சம் கொடுத்திருக்கிறார். அந்த நிலத்தின் ஆவணங்களை சரி பார்த்தபோதுதான், அந்த நிலம் வேறு ஒருவருடைய பெயரில் இருந்தது தெரியவந்தது. இறுதியில், அந்த நிலத்தின் சொத்து ஆவணங்களை சரிபார்த்தபோதுதான், அதில் வில்லங்கம் இருப்பது தெரியவந்தது. எனவே, இதுகுறித்து கிரிதரன், சுனில்கோபியை கேட்டுள்ளார். ஆனால் சுனில் கோபி பணத்தை திருப்பி தராமல் மிரட்டல் விடுத்திருக்கிறார்.
இது பற்றி கிரிதரன் கோவை மாவட்ட குற்றப்பிரிவில் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், கூட்டுசதி, மோசடி, நம்பிக்கை மோசடி, தவறான ஆவணங்களை தயாரித்தல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து தனிப்படை போலீசார் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் இருந்த சுனில்கோபியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.