இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது.
அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பீதியில் சினிமா பிரபலங்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ள நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு உதவ பிரபல கன்னட நடிகர் அர்ஜுன் கவுடா ஆம்புலன்ஸ் டிரைவராக மாறியுள்ளார். கடந்த சில நாட்களாக கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவ மனைகளில் ஆம்புலன்ஸ் தரவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில், “ப்ராஜெக்ட் ஸ்மைல் டிரஸ்ட்” அமைப்புடன் இணைந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டி வருகிறார். இவரின் இந்த செயல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.