தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் சூரி வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்றார். இவர் தற்போது பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதன்பிறகு நடிகர் சூரி நடிப்பது மட்டுமின்றி அம்மன் என்ற பெயரில் சில ஹோட்டல்களையும் நடத்தி வருகிறார். இந்த ஹோட்டல்கள் மதுரையில் உள்ள ஊமச்சிகுளம், ரிசர்வ் லைன் சந்திப்பு, அரசு மருத்துவமனை மற்றும் தெப்பக்குளம் போன்ற பகுதிகளில் செயல்படுகிறது.
இந்நிலையில் நடிகர் சூரிக்கு சொந்தமான ஹோட்டல்களில் வணிகவரித்துறையினர் திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதாவது ஜிஎஸ்டி இல்லாமல் உணவுக்கான கட்டணத்தை வசூலிப்பதாக பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வணிகவரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனையின் போது ஹோட்டலுக்கு மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கான ஆவணங்கள் இல்லாததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அம்மன் உணவகத்தின் மீதான புகார்களுக்கு 15 நாட்களுக்குள் நடிகர் சூரி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என வணிகவரித்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.