பிரபல தெலுங்கு நடிகர் வைஷ்ணவ் தேவ் மற்றும் கீர்த்தி செட்டி நடிப்பில் உருவான உப்பெனா திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தமிழ் டப்பிங் உரிமையை விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனம் வாங்கியதாக தகவல் வெளியானதை அடுத்து தமிழில் உப்பெனா திரைப்படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என தேனி மாவட்டத்தைச் சேர்ந்த உதவி இயக்குனரான டல்கவுசி பிரபு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தொடர்ந்த வழக்கில் உலக மகன் என்ற தன்னுடைய கதையை திருடி தான் உப்பெனா படத்தை எடுத்திருப்பதாக கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தரப்பிலிருந்து தங்களுடைய தயாரிப்பு நிறுவனம் உப்பெனா படத்தின் தமிழ் டப்பிங் உரிமையை வாங்கவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக கொடுக்கப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.