ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரபல நடிகை ரியாகுமாரி மரணத்தில் திடீர் திருப்பமாக அவரது கணவரே சுட்டுக் கொன்று விட்டு கொள்ளையர்கள் கொன்றதாக நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. திரை உலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ரியாகுமாரி. இவர் கடந்த புதன்கிழமை தேசிய நெடுஞ்சாலையில் கணவர் பிரகாஷ் குமார் மற்றும் 2 1/2 வயது குழந்தையுடன் சென்று கொண்டிருந்தபோது கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கணவர் புகாரளித்திருந்தார்.
இந்நிலையில் ரியா குமாரியின் பெற்றோர் அளித்த புகாரின் கீழ் பிரகாஷ் குமாரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அத்துடன் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் குழந்தையிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மனைவி தன்னை மதிக்காததால் அவளை கொன்றுவிட்டு கொள்ளையர்கள் சுட்டுக்கொன்றதாக நாடகமாடியதை பிரகாஷ் குமார் ஒப்புக்கொண்டார்.