அமெரிக்க நாட்டில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்துள்ளது. அந்த அடிப்படையில் அந்நாட்டின் டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரிலுள்ள ராப் ஆரம்பப் பள்ளிக்குள் சென்ற வாரம் துப்பாக்கியுடன் நுழைந்த 18 வயது இளைஞன் பள்ளிக் குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினான். இந்த கொடூர துப்பாக்கிச்சூட்டில் 19 பள்ளி குழந்தைகள், 2 ஆசிரியைகள் உட்பட 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சல்வடொர் ரமொஸ் என்ற இளைஞனை காவல்துறையினர் சுட்டு வீழ்த்தினர்.
இச்சம்பவம் உலகம் முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் டெக்சாஸ் பள்ளி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் யுவால்டி நகரிலுள்ள ராப் ஆரம்பப்பள்ளிக்கு இன்று சென்றார். அதன்பின் பள்ளி வளாகத்திற்கு வெளியே தற்காலிகமாக அமைந்துள்ள நினைவிடத்தில் அவர் சிலநிமிடங்கள் அமைதியாக நின்று அஞ்சலி செலுத்தினார்.
அதனை தொடர்ந்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் ஆதரவு தெரிவித்த அதிபர் ஜோபைடன், அவர்களுடன் அங்குள்ள தேவாலயத்தில் பிராத்தனை மேற்கொண்டார். அவர் தேவாலயத்திலிருந்து வெளியே வரும்போது அந்த தெருவில் நின்றிருந்த பொதுமக்கள், ஏதாவது செய்யுங்கள் என அவரை நோக்கி கூச்சலிட்டு வேண்டுகோள் விடுத்தனர். அதற்கு பதிலளிக்கும் வகையில் அதிபர் ஜோபைடன் நிச்சயமாக என தெரிவித்தார்.