அமெரிக்க பணவீக்க புள்ளிவிபரங்களானது நேற்று வெளியாகிய சூழ்நிலையில் ஜூன் 2022-ல் அந்நாட்டின் சில்லறை பணவீக்கம் 9.1 % ஆக அதிகரித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும் கொரோனா அதிகரிப்பு ஆகிய காரணங்களால் உலகளவில் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டு பொருட்களின் விலையானது கடுமையாக அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் பொருட்களின் தேவை அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகிய காரணங்களால் உணவுப் பொருட்கள் தொடங்கி பல பொருட்களின் விலையானது கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க நாட்டின் சில்லறை பணவீக்கமானது 9.1 % ஆக அதிகரித்துள்ளது. மேமாதம் அமெரிக்க நாட்டின் நுகர்வோர் பணவீக்கமானது 1 % உயர்ந்த நிலையில், ஜூன் மாதம் 1.3 % அதிகரித்து 9.1 % என்ற மோசமான நிலையை அந்நாட்டு அடைந்துள்ளதாக தொழிலாளர் புள்ளியியல் அமைப்பு தெரிவித்து உள்ளது. அமெரிக்கநாட்டில் பணவீக்க விகிதம் அதிகரிப்பதால் அங்கு பொருளாதார மந்தநிலை மீண்டுமாக ஏற்படுவதற்கான சூழல் உருவாகி வருவதாக பிரபல பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்து இருக்கின்றனர்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் வங்கி கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து வட்டிவிகிதத்தை பெடரல் வங்கி அதிகரித்து வருகிறது. இதன்தாக்கம் தங்கத்தின் விலையில் எதிரொலிக்கிறது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் அதிக வட்டி தரும் அமெரிக்க வங்கிகளுக்கு தங்களது முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதன் காரணமாக பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 1981 ஆம் வருடம் நவம்பர் மாதத்துக்குப் பின் தற்போதுதான் பணவீக்கம் 9.1 % அளவீட்டை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.