ஈரானில் ஹிஜாப் கெடுபிடிக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் போது காவல்துறையினர் சுட்டதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.
ஈரான் நாட்டில் சில நாட்களுக்கு முன்பு ஹிஜாப்பை சரியாக அணியவில்லை என்று கூறி மாசா என்ற 22 வயது இளம்பெண்ணை காவல்துறையினர் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். இது ஈரானிய பெண்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் பெண்கள் தாங்கள் அணிந்திருந்த ஹிஜாப்பை தீயிட்டு கொளுத்தியும், தங்கள் தலைமுடியை கத்தரித்தும் அரசிற்கு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வரும் நிலையில், அது வன்முறையாக வெடித்தது.
தலைநகர் டெஹ்ரான், காராஜ், தப்ரீஸ், கெர்மான் உள்ளிட்ட நகரங்களில் கடந்த வன்முறையில் 31 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனிடையே அமெரிக்காவின் CNN தொலைக்காட்சி பெண் பத்திரிகையாளர் தன்னுடைய தலைக்கு முக்காடு இட மறுத்ததால் அந்த தொலைக்காட்சிக்கு அளிக்க இருந்த பேட்டியை ஈரான் அதிபர் ஏப்ராஹிம் ரைசி ரத்து செய்து விட்டார். கைகுட்டையை கொண்டாவது பெண் பத்திரிகையாளர் கிறிஸ்டியன் அமெண்ட்ஃபோர் தன்னுடைய தலையை மறைக்க வேண்டும் என அதிபர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் எந்த முந்தைய அதிபரும் இதுபோன்று வலியுறுத்தவில்லை எனக்கூறி அந்தப்பெண் நிறுவர் கிறிஸ்டியன் அமெண்ட்ஃபோர் ஹிஜாப் அணிய மறுத்துவிட்டார்.
அண்மையில் ஈரானின் புதிய அதிபராக பதவியேற்ற ஏப்ராஹிம் ரைசி ஹிஜாப்பை சரியாக அணியாத பெண்களை தண்டிப்பதற்காக ஹிஜாப் காவல்துறை என்ற புதிய துறையை உருவாக்கினார். சில நாட்களுக்கு முன்பு மாசா என்ற இளம்பெண் ஹிஜாப்பால் தன்னுடைய தலையை சரியாக மூடவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டு ஹிஜாப் காவல்துறையினரால் தாக்கப்பட்டார். கோமா நிலைக்கு சென்ற அந்தப்பெண் மரணமடைந்தார். இதனால் ஈரான் முழுவதுமாக இந்த கெடுபிடிக்கு எதிராக போராட்டம் வலுத்து வருகின்றது.