துபாயில் போதை பொருள் வைத்திருந்த இஸ்ரேல் நாட்டு பெண்மணிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டில் புகைப்பட ஸ்டுடியோ நடத்தி வருபவர் பீடா கீவான். இவர் வேலை நிமிர்த்தமாக துபாய் சென்றுள்ளார். ஒரு வாரத்திற்குப் பிறகு இவர் தங்கியிருந்த வீட்டை போலீசார் சோதனையிட்ட போது அதில் அரை கிலோ அளவிலான கொக்கைன் வகை போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். துபாயில் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும் என்பதை வெளிநாட்டினர் புரிந்து கொள்ள வேண்டும் என அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.