சீனாவில் மனித உரிமை மீறல் குறித்த விவகாரத்தில் வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.
சீனா நாட்டில் வடமேற்கில் ஜின்ஜியாங் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உய்குர் இனத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். இந்த மாகாணத்தில் பல லட்சம் முஸ்லிம்கள் முகாம்களில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு வருகின்றனர் என்று உலகம் முழுவதும் தெரிய வந்துள்ளது. ஆனால் இதனை சீனா மறுத்து வந்துள்ளது. இதற்கிடையில் மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஆணையர் அலுவலகம் சீனாவில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஜின்ஜியாங் பகுதியில் அரங்கேறிய கொடுமைகள் பற்றிய அறிக்கை ஒன்றை புதன்கிழமை அன்று வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஜின்ஜியாங் விவகாரம் பற்றி ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையின் பரிந்துரைகளை சீனா பின்பற்ற வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், சீனாவின் மனித உரிமை மீறல் தொடர்பான விவகாரத்தில் வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, “இந்த அறிக்கையை அமெரிக்கா வரவேற்கின்றது. இந்த முக்கியமான அறிக்கை, உய்குர் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்களை சீன மக்கள் குடியரசின் வெறுக்கத்தக்க மனித உரிமைகள் நடத்துவதை அதிகாரப்பூர்வமாக விவரிக்கின்றது” என தெரிவித்துள்ளார்.