ஸ்வீடனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் பிரதமர் மக்டலேனா ஆண்டர்சனின்(Magdalena Andersson) மைய-இடது கூட்டணி, வலதுசாரி கூட்டணியிடம் தோல்வியை தழுவியது.
நார்டிக் நாடான ஸ்வீடனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் பிரதமர் மக்டலேனா ஆண்டர்சனின் மைய-இடது கூட்டணி 173 இடங்களை மட்டுமே கைப்பற்றி வலதுசாரி கூட்டணியிடம் தோல்வியை தழுவியுள்ளது. 99 % வாக்குகள் எண்ணப்பட்டு இருக்கும் நிலையில் வலதுசாரி கட்சி கூட்டணி மொத்தம் 176 இடங்களை பெற்று பெரும்பான்மையை அடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டின் புதிய அரசாங்கத்தை மிதவாதக் கட்சியின் தலைவர் உல்ஃப் கிறிஸ்டெர்சன்(Ulf Kristersson) அமைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஸ்வீடன் நாட்டின் வழக்கப்படி வாக்கு மறு எண்ணிக்கைக்கு பிறகு இறுதி முடிவு உறுதிப்படுத்தப்படும் நடைமுறை கடைப்பிடிக்கப்படுகின்றது.
இருப்பினும் புதன்கிழமை அன்று செய்தியாளர்களை சந்தித்த ஆண்டர்சன் தனது தோல்வியை ஏற்றுக் கொண்டு வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். மேலும் நாடாளுமன்றத்தில், அவர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு இடங்களே சாதகமாக உள்ளன. இது ஒரு மெல்லிய பெரும்பான்மை, எப்படி இருப்பினும் அது ஒரு பெரும்பான்மை என தெரிவித்தார். மக்டலேனா ஆண்டர்சன் கடந்த ஆண்டு பதவியேற்ற போது நோர்டிக் நாட்டின் முதல் பெண் பிரதமராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.