பிரபல பாடகர் எஸ்.பி.பி அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது வரை தமிழகத்தில் 2.6 லட்சம் கொரோனா பாதிப்பு இருக்கின்ற நிலையில், சென்னையில் ஒரு லட்சத்தை கடந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னை, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அதனால் சின்னத்திரை படப்பிடிப்பு மட்டுமே சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சினிமா படப்பிடிப்புக்கு தற்போதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை. கொரோனா காரணமாக பிரபலங்கள் பெரும்பாலானோர் அவரவர் வீட்டிலேயே இருக்கின்றனர். அதிலும் சிலருக்கு கொரோனா உறுதி ஆகிய நிலையிலும், வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டு குணமாகி விட்டார்கள்.
இந்நிலையில் இன்று காலையில் இருந்து பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா உறுதி ஆகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதனைத்தொடர்ந்து பலரும் அவருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்த நிலையில், தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், கடந்த மூன்று நாட்களாக எனக்கு உடல்நிலை சரியாக இல்லை. சளி மற்றும் காய்ச்சல் விட்டு விட்டு வருகிறது. இவற்றைத் தவிர வேறு எந்த பிரச்சினையும் இல்லை. இருந்தாலும் இதனை நான் எளிதாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. அதனால் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்தேன். எனக்கு மிக மிக லேசான அறிகுறியுடன் கொரோனா இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.
என்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் குடும்பத்துடன் இருக்கும்போது இது மிகவும் கடினமானது. அதனால் தான் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். என்னுடைய நண்பர்கள் இங்கு உள்ளார்கள். அவர்கள் என்னை நன்றாகப் பார்த்துக் கொள்கிறார்கள். அதனால் நான் நன்றாக இருக்கிறேன். இது பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். சளி மற்றும் காய்ச்சல் மட்டுமே தற்போது உள்ளது. காய்ச்சல் குணமாகிவிட்டது. இன்னும் இரு நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவேன். நன்றி என்று கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய அனைத்து மொழிகளிலும் முன்னணி பாடகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் எஸ்.பி.பி . அதனால் அவர் பூரண குணமடைய வேண்டும் என்று திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.