பாகிஸ்தான் நாட்டில் புல்புல் என அழைக்கப்பட்ட இந்திய வம்சாவளியான பிரபல பாடகி நய்யரா நூர் காலமானார்.
பாகிஸ்தான் நாட்டின் புல்புல் என அழைக்கப்பட்ட பழம்பெரும் பாடகி நய்யரா நூர் என்பவர் உடல்நல குறைவால் காலமானார். இவருடைய வயது 71 ஆகும். இது குறித்து அவரது மருமகன் ராணா ஜைடி டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “நய்யரா நூர் மறைவு செய்தியை கனத்த மனதுடன் அறிவிக்கின்றேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது மென்மையான குரலுக்காக, பாகிஸ்தானின் புல்புல் என்ற பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
நூரின் மறைவு செய்தியறிந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நூர் பாடிய கஜல் ஆகட்டும் அல்லது எந்தவொரு பாடல் ஆகட்டும். அவர் மிக சரியாகவே அதனை பாடுவார். அவரது மறைவால் ஏற்பட்ட வெற்றிடம் ஒருபோதும் நிரப்பப்படாது” என அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் அசாமில் கடந்த 1950- ஆம் ஆண்டு பிறந்தவர் நூர். இதன்பின்னர், 1950-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தனது குடும்பத்துடன் பாகிஸ்தானுக்கு புலம் பெயர்ந்து சென்றார். மெல்லிசையில் தீவிர ஆர்வம் கொண்ட நூர் மிக இளம் வயதில் இசையை கற்க தொடங்கினார். அவர், 1968-ம் ஆண்டு ரேடியோ பாகிஸ்தானில் முதன்முறையாக பாட தொடங்கியுள்ளார். அவருக்கு கணவர் ஷெஹாரியார் ஜைடி, அலி மற்றும் ஜாபர் என இரண்டு மகன்கள் உள்ளனர்.