Categories
மாநில செய்திகள்

பிரபல ரவுடிகள் 12 பேரிடம் நடத்தப்படும் உண்மை கண்டறியும் சோதனை…. எதிர்பார்ப்பில் புலனாய்வுக்குழு அதிகாரிகள்….!!!!

பிரபல ரவுடிகளிடம்  உண்மையை கண்டறியும் சோதனை நடத்தப்படவுள்ளது.

கடந்த 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29-ஆம் தேதி தொழிலதிபரான ராமஜெயம்  தில்லை நகரில் உள்ள தனது வீட்டின் அருகே  நடை பயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மர்ம நபர்கள் அவரை கடத்தி படுகொலை செய்தனர். மேலும் அவரது உடலை கட்டுக்கம்பியால் கட்டி  பொன்னி டெல்டா பகுதியில் காவிரி ஆற்று  கரையோரம் வீசி சென்றனர். இந்த சம்பவம் திருச்சி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. மேலும் இந்த கொலை குறித்து ஸ்ரீரங்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து நடத்தினர். இதனையடுத்து 12 தனி படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடினார்கள். ஆனால் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இதனால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

மேலும் 5  ஆண்டுகள் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணை நடத்தியும் வழக்கில் முன்னேற்றம் இல்லை. இதனையடுத்து சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. ஆனாலும் கொலையாளி யார் என்பது கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் நீதிமன்ற உத்தரவுப்படி ராமஜெயம் கொலை வழக்கில் துப்பு துவக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், துணை காவல் கண்காணிப்பாளர் மதன், சி.பி.ஐ  அதிகாரி ரவி ஆகியோர் அடங்கிய இந்த சிறப்பு புலனாய்வு குழுவில் பல்வேறு வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் இடம் பெற்றிருந்தனர்.

பல மாதங்களாக நடத்திய விசாரணையில் குறிப்பிட்ட மாடல் காரில் ராமஜெயத்தை கடத்தி சென்றது தெரிய வந்தது. இது தொடர்பாக அதே மாடல் கார்களை தமிழகம் முழுவதும் பயன்படுத்தி வந்த உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் என 1,500-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். இதனையடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பிரபல ரவுடிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் சந்தேகத்திற்குரிய 20 ரவுடிகளிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்களில் பல்வேறு வழக்குகள் தொடர்புடைய 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு புலனாய்வு குழு காவல் துறையினர் திட்டமிட்டனர்.

மேலும் இதற்காக திருச்சியை சேர்ந்த சாமி ரவி, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மோகன்ராம், நரைமுடி கணேசன், மாரிமுத்து, சத்யராஜ், தினேஷ், திலீப், ராஜ்குமார், சிவா உள்ளிட்ட 12 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதில் 12 பேரும் இன்று காலை திருச்சி மாஜிஸ்திரேட்டு  கோர்ட்டு எண் 6-இல்  ஆஜராக வேண்டும் என தெரிவித்திருந்தது. மேலும் அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த ஆட்சேபனை இருப்பின் அதை கோர்ட்டில் தெரிவிக்கலாம் என்றும் சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஏற்கனவே ராமஜெயம் கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரணை நடத்திய போது இரண்டு பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினார்கள்.

அதில் எந்த பயனும் கிடைக்கவில்லை. தற்போது பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடிகள் 12 பேரிடம் அதிரடியாக உண்மை கண்டறியும் சோதனை நடத்த இருப்பதால் வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Categories

Tech |