சேலம் மாவட்டத்தில் பிரபல ரவுடி கொலை வழக்கில் முக்கிய கொலையாளி நாகர்கோவிலில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலால் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வந்தார். பிரபல ரவுடியான இவரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்து விட்டது. இந்தக் கொலை காரணமாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படை குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தனிப்படை காவல் துறையினர் இதுவரை 31 கொலையாளிகளை கைது செய்துள்ளனர். அதில் 14 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்நிலையில் கொலை வழக்கில் மூளையாக செயல்பட்ட சேட்டான் தற்போது நாகர்கோவிலில் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிய வந்துள்ளது. இதனால் நாகர்கோவில் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.