பிரபல உணவகத்தில் கெட்டுப்போன இறைச்சி கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வடபழனியில் யா முகைதீன் என்ற பிரபல உணவகம் இருக்கிறது. இங்கு கெட்டுப்போன இறைச்சிகளை பயன்படுத்துகிறார்கள் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி யா முகைதீன் கடையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதில் 50 கிலோ கெட்டுப்போன இறைச்சி, மீன், இறால் போன்றவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனையடுத்து கடைக்கு அதிகாரிகள் 5,000 ரூபாய் அபராதம் விதித்ததுடன், இது போன்று மற்றொரு முறை தவறு நடந்தால் நிரந்தரமாக கடை மூடப்படும் எனவும் எச்சரித்துள்ளனர். மேலும் கடையில் உரிமையாளரிடம் நாங்கள் இதுபோன்ற தவறுகளை செய்ய மாட்டோம் என எழுதி வாங்கியுள்ளனர். அதன்பிறகு யா முகைதீன் என்ற பெயரில் இருக்கும் அனைத்து கடைகளிலும் சோதனை செய்யப்படும் எனவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.