பிரபல இசை அமைப்பாளர் பிரம்மாண்டமான இசை கச்சேரியை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபலமான இசை அமைப்பாளராக வலம் வரும் அனிருத், தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து வேதாளம், மான் கராத்தே, தானா சேர்ந்த கூட்டம், பீஸ்ட், எதிர்நீச்சல், கத்தி, மாரி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் தன்னுடைய இசை திறமையின் மூலமாக பல்வேறு ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார். இந்நிலையில் அனிருத் இசை அமைப்பாளராக அறிமுகமாகி 10 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.
இதை கொண்டாடும் விதமாக அனிருத் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் பிரம்மாண்டமான இசை கச்சேரிக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த இசை கச்சேரியை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருடன் இணைந்து நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த இசை நிகழ்ச்சிகள் வருகிற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறும். மேலும் கோயம்புத்தூரில் இசைக்கச்சேரி நேரடியாகவும், சென்னையில் நடைபெறும் இசைக்கச்சேரியை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.