தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதன்பின் சூரரை போற்று என்ற திரைப்படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு சமீபத்தில் தேசிய விருது கிடைத்தது. இவர் தற்போது வாடிவாசல் மற்றும் வணங்கான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த வருகிறார். அதோடு சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதற்கும் நடிகர் சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் இசை வெளியீட்டு விழாவில் வேள்பாரி நாவல் குறித்த சில கருத்துக்களை நடிகர் சூர்யா கூறியிருந்தார்.
சமீப காலமாகவே வேள்பாரி என்ற நாவல் படமாக எடுக்கப்பட போவதாகவும் அந்த படத்தை இயக்குனர் சங்கர் இயக்குவதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இதனையடுத்து வேள்பாரி நாவல் கதையை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும், நடிகர் சூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகிறது.
பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் வேள்பாரி படத்தில் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அடுத்த வருட பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகிறது. மேலும் பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து வேள்பாரி நாவலும் படமாக எடுக்கப்பட இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.