பொது இடங்களில் பிராங்க் வீடியோ எடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போலீஸ் கமிஷனர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
கோயம்புத்தூர் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது, சமீப காலமாக பிராங்க் வீடியோ என்ற பெயரில் பலர் பூங்காக்கள், நடை பயிற்சி மைதானங்கள், பள்ளி வளாகங்கள் போன்ற இடங்களில் குறும்பு தனமான செயல்களில் ஈடுபடுகின்றனர். அதனை தொழில் முறை ரீதியாக யூடியூப் சேனலில் வெளியிட்டு பணம் சம்பாதிக்கின்றனர். ஆனால் சில வீடியோக்களில் நடிப்பவர்கள் முகம் சுளிக்கும் விதமாக பெண்களிடம் எதேச்சையாக நடிப்பது போன்று தொட்டு அல்லது கையைப் பிடித்து அநாகரிகமாக நடிக்கிறார்கள். இதனால் சம்பந்தப்பட்டவர்கள் உடல் ரீதியான அதிர்ச்சியையும், மனரீதியான குழப்பத்தையும் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
பின்னர் பிராங்க் வீடியோ எடுப்பவர்கள் அதுகுறித்து தெரிவித்து சம்பந்தப்பட்டவர்களை சமாதானம் செய்கின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட நபரின் அனுமதியின்றி அவருக்கு தெரியாமல் பிராங்க் வீடியோக்களை யூடியூபில் வெளியிடுவதால் இயல்பு வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் ரேஸ்கோர்ஸ் சாலை போன்ற மக்கள் கூடும் பொது இடங்களில் பிராங்க் வீடியோ எடுப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். எனவே கோவை மாநகரில் பிராங்க் வீடியோ எடுத்தல் என்ற பெயரில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவரது யூடியூப் சேனல் முடக்கப்படும். மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.