பீகாரில் கிராமமக்கள் ஒன்று சேர்ந்து பிரான்பூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு காவல்துறையினரையும் அடித்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்ற வெள்ளிக்கிழமை 40 வயதான பிரமோத் குமார் சிங் என்பவர் மதுபாட்டில்களை வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பிரமோத் குமார் சிங் போலீஸ் நிலையத்தில் இறந்துகிடந்தார். அதாவது போலீஸ் காவலில் இருந்த நபர் உயிரிழந்ததை அடுத்து, இச்செய்தி காட்டுத் தீயாக அப்பகுதியில் பரவியது.
உடனடியாக உள்ளூர் வாசிகள் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை சேதப்படுத்தினர். மேலும் அங்கு இருந்த 9 காவல்துறையினரையும் வெறித்தனமாக அடித்துள்ளனர். இவ்வாறு கிராமமக்கள் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தியதில் அதிகாரிகள் காயமடைந்தனர். உடனே அருகிலுள்ள காவல் நிலையங்களிலிருந்து கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்புப் பணிக்கு வரவழைக்கப்பட்ட பிறகே நிலைமை கட்டுக்குள் வந்தது.
இதனிடையில் காயமடைந்த காவல்துறையினர் அனைவரும் கதிஹாரிலுள்ள மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையில் இறந்த பிரமோத் குமார் சிங்கின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் காவல்துறையினரை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது என செயல் காவல் கண்காணிப்பாளர் தயா சங்கர் தெரிவித்தார். சென்ற 2016 முதல் பீகார் மாநில அரசு மதுபானம் உற்பத்தி மற்றும் விற்பனை போன்றவற்றைத் தடைசெய்தது. மேலும் அதனை தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கியது குறிப்பிடத்தக்கது.