பிரான்சில் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் ஜூன் 30-ம் தேதியில் முழுமையான ஊரடங்கு விதிமுறைகளை தளர்த்த திட்டமிட்டுள்ளார்.
பிரான்சில் மூன்றாவது தேசிய ஊரடங்கு ஏப்ரல் 3-ம் தேதி முதல் அமலில் இருக்கும் நிலையில் அதனை தளர்த்த பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் அதற்கான 4-ம் கட்ட திட்டத்தை வகுத்து வெளியிட்டுள்ளார். அதன்படி நாட்டில் விதிக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் மே 3-ம் தேதி தொடங்கி படிப்படியாக ஜூன் 30-ஆம் தேதிக்குள் ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மே 3-ஆம் தேதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் பள்ளிகளில் திரும்ப தொடங்கப்படும் எனவும், உள்நாட்டில் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் இரவு 7 மணி ஊரடங்கு மே 19-ஆம் தேதி முதல் 9 மணிக்கு தள்ளப்படும்.
மேலும் உணவகங்கள், காபி ஷாப் என வெளிப்புறங்களில் மீண்டும் திறக்கப்படும். அதனைத் தொடர்ந்து சினிமாக்கள், அத்தியாவசியமற்ற கடைகள், தியேட்டர்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவை கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படும். அதன்பின் இரவு ஊரடங்கு உத்தரவு ஜூன் 9-ம் தேதி முதல் மீண்டும் 11 மணிக்கு தள்ளப்படும். மேலும் நாட்டிற்குள் நுழையும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும், பெரிய நிகழ்வுகள் மற்றும் அரங்கங்களில் கலந்து கொள்பவர்களுக்கும் “ஹெல்த் பாஸ்” அறிமுகப்படுத்தப்படும். அதனை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு ஜூன் 30-ஆம் தேதி முதல் முற்றிலுமாக நீக்கப்படும். ஆனால் அதில் இரவு விடுதிகள் மட்டும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.