தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்ததால் மிகுந்த ஆத்திரம் அடைந்தே காதல் மனைவி மீது ஆசிட் வீசி கொலை முயற்சி செய்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தளி என்ற பகுதியில் 38 வயதுடைய பிரிஜேஸ் என்பவர் வசித்து வருகிறார். அவர் பத்தனம்திட்டா மாவட்டம் ராணி அருகே இருக்கின்ற பெண்குலம் கிழக்குப் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய பிரிஜா என்ற பெண்ணை 13 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் ஆத்திரமடைந்த பிரிஜா தனது இரண்டு மகன்களையும் அழைத்துக் கொண்டு மடத்தும்குழி என்ற இடத்தில் இருக்கின்ற தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அதன்பிறகு அங்கு இருக்கின்ற பஜார் ஒன்றில் துணிக்கடை ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். அவரின் கணவர் பலமுறை சென்று தன்னுடன் சேர்ந்து வாழுமாறு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிரீஜா நேற்று முன்தினம் வழக்கம் போல் தனது தாய் வீட்டில் இருந்து வேலை செய்யும் துணிக்கடைக்கு நடந்து சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து சென்ற அவரின் கணவர் மீண்டும் தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அவர் மீண்டும் மறுப்பு கூறியுள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்த அவர், தனது பையில் மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்து அதில் இருந்த ஆசிட்டை பிரிஜா மீது வீசியுள்ளார்.
அதில் அவரின் முகம் மற்றும் தோள்பட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.அதனால் துடிதுடித்த அவரைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதனிடையே தனது காதல் மனைவி மீது ஆசிட் வீசிய கணவரை அக்கம்பக்கத்தினர் அனைவரும் சுற்றி வளைத்து பிடித்தனர். அதன்பிறகு அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.