பிரியாணி என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு வகையாகும். முன்பெல்லாம் சாதாரண மக்கள் கைக்கு எட்டாத நிலையில் இருந்து வந்த பிரியாணி கடந்த ஐந்து வருடங்களாக நிறைய கடைகள் திறக்கப்பட்tathal மக்கள் சாதாரணமாக வாங்கும் உணவாக மாறியது. மேலும் 80 ரூபாய் முதல் கிடைப்பதனால் அதிக அளவிலான மக்கள் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாக பிரியாணி மாறியது. திருப்பூரில் அமைந்துள்ள காங்கேயம் சாலையில் சுமார் 15க்கும் அதிகமான பிரியாணி கடைகள் செயல்பட்டு கொண்டிருகிறது.
இந்த பிரியாணி கடைகள் வார நாட்கள் அனைத்து தினங்களிலும் கிடைக்கும் என்றதனால் திருப்பூர் மக்கள் பிரியாணி சாப்பிடவும், பார்சல் வாங்கவும் தேர்ந்தெடுக்கும் முதல் இடமாக காங்கேயம் பிரியாணி கடை விளங்குகிறது. இந்நிலையில் திருப்பூர் மங்கலம் சாலையில் புதிதாக தாத்தா பிரியாணி கடை திறப்பு விழா நடைபெற்றுள்ளது. இதில் திறப்பு விழா சலுகையாக இன்று ஒரு நாள் மட்டும் ஒரு கிலோ பிரியாணி 100 ரூபாய்க்கும், அதனுடன் இலவச இணைப்பாக இரண்டு முட்டை, மற்றும் 100 கிராம் சில்லி சிக்கன் போன்றவை வழங்கப்படும் என பிட் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டதை தொடர்ந்து காலை 11 மணி முதல் மக்கள் கூட்டம் கூட ஆரம்பித்தது.
கூட்டத்தை ஒரு கட்டத்திற்கு மேலே கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் போலீசார் வந்து கூட்டத்தை கட்டுப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து இந்த ஆஃபரை கண்ட வாகன ஓட்டிகளும் சாலையோரமாக வாகனத்தை நிறுத்தி வைத்து விட்டு பிரியாணி வாங்க சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதன்பின் சிறிது நேரத்தில் மொத்த பிரியாணியும் தீர்ந்து போனதால் பின்னர் வந்தவர்கள் ஏமாற்றம் அடையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மாலை 3:30 மணிக்கு பிரியாணி வழங்கப்படும் என கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். அதனால் பொதுமக்கள் கிளம்பி சென்றனர். 100 ரூபாய்க்கு பிரியாணி விற்கப்படும் என்ற அறிவிப்பை கேட்டதால் பலரும் பிரியாணி வாங்குவதற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர்.