சென்னையில் உள்ள ராஜாமுத்தையாபுரத்தில் இளங்கோ-சங்கரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஹரிஷ் (வயது 24) என்ற மகன் இருந்தார். இவர் ராஜாஅண்ணாமலைபுரத்தில் காமராஜர் சாலையில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் நேற்று முன்தினம் இரவு பிரியாணி சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு சாப்பிட்டதற்கான பணத்தை கொடுக்காமல் தகராறில் ஈடுபட்டுள்ளார். பிரியாணி சாப்பிட்டதற்கு பணத்தை கொடுக்காமல் செல்போனை கொடுத்ததால் பயங்கர தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கிருந்த ஹோட்டல் ஊழியர்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணைக்காக ஹரிஷை காவல்நிலையம் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து விசாரணை முடிந்ததும் காவல்துறையினர் அவரை வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஹரிஷ் வீட்டிற்கு வந்த சிறிது நேரத்திலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் ஹரிஷ் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில் ஹரிஷின் பெற்றோர், காவல்துறையினர் தங்களுடைய மகனை விசாரணைக்கு அழைத்து சென்று துன்புறுத்தியதால் தான் மன உளைச்சல் தாங்காமல் அவர் உயிரிழந்துவிட்டார் என்று குற்றம்சாட்டியுள்ளனர்.