பழுதடைந்த பேருந்தை ஓட்டுவதற்கு வற்புறுத்துவதாக நடத்துனர் ஒருவர் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள ராணித் தோட்டம் பகுதியில் அரசு போக்குவரத்து பணிமனை கழகம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு சிபு என்பவர் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவர் தனக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சல் தொடர்பாக ஒரு வீடியோவினை வெளியிட்டுள்ளார். அதில் நாகர்கோவிலில் இருந்து அருமனை பகுதிக்கு பணிமனை எண் 318 கொண்ட பேருந்து இயங்கி வருகிறது. இந்தப் பேருந்தில் நான் நடத்துனராக பணியாற்றி வருகிறேன். இந்த பேருந்தில் பிரேக் இல்லை. இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் அவர்கள் பிரேக் இல்லாத பேருந்தை தான் ஓட்ட வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்.
இதன் காரணமாக எங்களின் உயிருக்கும் பயணிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது. நாங்கள் பிரேக் இல்லாத பேருந்தை ஓட்டுவது சிரமம் என்று பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அவர்கள் கண்டு கொள்வதில்லை. அதுமட்டுமின்றி பேருந்துகளை முறையாக பராமரிக்காத அதிகாரிகள் பழுதடைந்த பேருந்துகளை ஓட்டுவதற்கு நிர்பந்திப்பது மிகவும் மன உளைச்சலாக இருக்கிறது என்று கூறியுள்ளார். இதேபோன்று நேற்று அரசு பேருந்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் வீடியோ வெளியிட்ட நிலையில், தற்போது மற்றொருவர் வெளியிட்டிருப்பது பொதுமக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.