பிறந்த நாள் கொண்டாட நண்பர்களுடன் சென்ற நபர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் உள்ள கிழக்கு யார்க்ஷயர் பகுதியை சேர்ந்தவர் சைமன் ஹால்டர். இவர் தன்னுடைய பிறந்தநாள் அன்று தனது நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து படகு சவாரி சென்றுள்ளார். அங்கு படகு ஒன்றில் தன் பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். அப்போது இவரது நண்பர்கள் ஹால்டரை விளையாட்டிற்காக தண்ணீரில் தூக்கிப்போட்டுள்ளனர்.
இதனைதொடர்ந்து ஹால்டர் படகு நோக்கி நீந்தி வந்து கொண்டிருக்கையில் அவரது நண்பர்கள் இருவர் அவரை காப்பாற்ற நீரில் குதித்துள்ளனர்.படகில் இருந்தவர்கள் இவர்களை படகில் ஏற்றுவதற்கு படகை திரும்பியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக படகில் உள்ள ப்ரோபல்லரில் ஹால்டரின் கால் சிக்கிக்கொண்டுள்ளது. இதனைப் பார்த்த படகில் இருந்த மற்றொரு நண்பர் படகை உடனே நிறுத்தும்படி கூறியுள்ளார்.
ஆனால் படகு இயந்திரங்களின் அதிக சத்தத்தால் படகு ஓட்டுநருக்கு கேட்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து ஹால்டரை காப்பாற்ற மேலும் மூன்று நண்பர்கள் நீரில் குதித்துள்ளனர். சிறிது நேரம் கழித்து ஹால்டர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் ஹால்டருக்கு ரத்தம் அதிகமாக வெளியேறியதால் காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து ஆல்ட்ரின் தாயார் நீதிமன்றத்தில் கூறியுள்ளதாவது, “ஹால்டரின் நண்பர்கள் அவருக்கு சகோதரர்களை போன்றவர்கள். இது ஒரு கொடூரமான விபத்து தான்” என்று தெரிவித்துள்ளார்.