கோவை அரசு மருத்துவமனையில் கழிவறையில் பிணமாக கிடந்த பச்சிளம் குழந்தையை குறித்து கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை அரசு மருத்துவமனையில் பல்வேறு பகுதியில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றன. இங்கு அவசர சிகிச்சை பிரிவில் நோயாளிகளின் உடல் நிலையை பரிசோதித்து விரைந்து சிகிச்சை அளிக்கும் விதமாக சிவப்பு, மஞ்சள், பச்சை என மூன்று வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிவப்பு பிரிவான விபத்து மற்றும் அதி தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள கழிவறையில் நேற்று வழக்கம்போல் பணியாளர்கள் சுத்தம் செய்ய சென்றனர்.
அப்போது அங்கு பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை அசைவின்றி கிடந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் மருத்துவ ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அங்கு வந்து குழந்தையை மீட்டு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த டாக்டர் குழந்தை இறந்து பல மணி நேரம் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். பின்னர் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை யார் வீசி சென்றார்கள்? அந்த குழந்தையின் தாய் யார்? என்று பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து மருத்துவமனை வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவில் போலீசார் இன்று ஆய்வு நடத்தி வருகின்றனர். ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் கடந்த இரண்டு நாட்களில் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த பெண் குழந்தை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.