பிறந்த 11 மாதமே ஆன பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஓடக்கரைப்பட்டி பகுதியில் வீரபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிறந்து 11 மாதமே ஆன மதுஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீரென குழந்தைக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர் குழந்தையை அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மாத்திரைகளை வாங்கி வந்து வீட்டில் வைத்து பராமரித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் திடீரென பேச்சு மூச்சு இல்லாமல் அசைவின்றி குழந்தை இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக கழுகுமலை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கி சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மதுஸ்ரீ ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.