கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள சிக்கந்தர் சாவடி மந்தையம்மன் கோவில் தெருவில் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டிட தொழிலாளியான கண்ணன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி கண்ணன் வெட்டுக் காயங்களுடன் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு கண்ணனை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அதே பகுதியில் வசிக்கும் அஜித், பிரதாப், பாரதி, நம்பிராஜன், செல்லப்பாண்டி ஆகிய 5 பேரை கைது செய்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. அதாவது சிக்கந்தர் சாவடியில் வைத்து கல்லூரி மாணவர் ஒருவருக்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது. அப்போது எங்கள் பகுதிக்கு ஏன் வந்து பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள் என கண்ணன் தகராறு செய்துள்ளார். இதனால் கோபமடைந்த வாலிபர்கள் கண்ணனை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.