நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் அதனால் ஏற்படும் பாதிப்புகளின் எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஒரு சில மாநிலங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை உச்சத்தில் உள்ளது. அதன் காரணமாக சமீபத்தில் பீகார் உயர் நீதிமன்றம் ஆணைக்கு இணங்க கொரோனா காரணமாக பீகாரில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை மீண்டும் எண்ணப்பட்டது.
அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக கொரோனா காரணமாக மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 73 சதவீதம் அதிகரித்தது. அதைத்தொடர்ந்து சிவசேனா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி அனைத்து மாநிலங்களிலும் இதுபோல எண்ணப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அவ்வாறு மீண்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆராய்ந்தால் மட்டுமே சில உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்று அவர் கூறியுள்ளார்.