பிலிப்பைன்ஸில் அதிபர் தேர்தலின்போது ஏராளமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வீச்சு போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிபர் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றுள்ளது. இதில் அதிபரை தவிர்த்து, துணை அதிபர், 12 செனட்சபை உறுப்பினர்கள், 300-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் மற்றும் 17,000-க்கும் அதிகமான உள்ளாட்சி அமைப்புகளுக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற 6.5 கோடி மக்களுக்காக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு வாக்களிக்க தொடங்கிய நிலையில் பொதுமக்கள் அதற்கு முன்பாகவே வாக்களிக்க வாக்குச்சாவடிகளுக்கு வந்து நீண்ட நேரமாக கால்கடுக்க வரிசையில் காத்திருந்து தங்களின் ஜனநாயக கடைமையை ஆற்றினர். குறிப்பாக கடந்த அதிபர் தேர்தலை விட இம்முறை வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் நாட்டில் தேர்தலின்போது மோசமான வன்முறைகளையும், கலவரத்தையும் சந்தித்ததாக வரலாறு கூறுவதால், இந்த தேர்தலின் போது அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக நாடு முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் செயல்பட்டு வருகின்றனர். இருப்பினும் அதனை மீறியும் ஆங்காங்கே அடிதடி கலவரங்கள், வன்முறை போன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
பிலிப்பைன்சின் தெற்கு மாகாணமான மகுயிண்டனாவில் புலாவன் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு விறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது 2 வேன்களில் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் வாக்காளர்களுக்கு உதவும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த தன்னார்வலர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இதனைப்போன்று பசிலன் மாகாணத்தில் சுமிசிப் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை.
இதற்கு முன்னதாக மகுயிண்டனாவ் மாகாணத்தில் உள்ள மற்றொரு வாக்குச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலின் போது 8 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதே போல் மிண்டானாவ் மாகாணத்தில் உள்ள டவுஅன்சே நகரிலும், ஷெரீப் அகுவாக் நகரிலும் வாக்குச்சாவடிகளின் மீது கையெறி குண்டுகள் வீசப்பட்டதாகவும் இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2009-ம் வருடம் அதிபர் தேர்தலின்போது மகுயிண்டனாவ் மாகாணத்தில் அப்போதைய ஆளுநரின் ஆதரவாளர்கள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 32 செய்தியாளர்கள் உள்பட 58 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இந்த தேர்தலில் அதிபர் பதவிக்கு 10 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் பிலிப்பைன்சின் சர்வாதிகாரியான பெர்டினாண்ட் மார்கோசின் மகன் போங்போங் மார்கோஸ் மற்றும் தற்போதைய துணை அதிபர் லெனி ரோபெர்டோ ஆகிய இருவரில் ஒருவரே அதிபராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்று கருத்து கணிப்பின் முடிவில் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து துணை அதிபர் பதவிக்கு தற்போதைய அதிபர் ரோட்ரிகோ துதர்தேவின் மகள் சாரா துதர்தே தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.