தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு சற்று கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து,9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது.
ஆனால் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதனால் அவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. கடந்த வாரம் தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்கியது. இதனையடுத்து மே 5ஆம் தேதி பொதுத் தேர்வு நடைபெற இருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதனையடுத்து பிளஸ் 2 மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இனி பொதுத் தேர்வு தொடங்கும் போது 15 நாட்களுக்கு முன்பு பள்ளிகள் திறக்கப்படும். அதுவரை மாணவர்கள் வீட்டிலிருந்தே தேர்வுக்கு தயாராக வேண் டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது.
இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு விடுமுறை அளித்தாலும் அவர்களுக்கு தொடர்ந்து திருப்புதல் பயிற்சிகளை ஆன்லைனில் வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த ஆண்டு மிகக் குறைந்த நாட்களே மாணவர்களுக்கு பாடம் எடுத்துள்ளதால், மாணவர்களின் நலன் கருதி அவர்களது பொதுத்தேர்வு வரை பாடங்களை எடுத்து நல்ல மதிப்பெண் எடுக்க ஆசிரியர்கள் உதவ வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.