வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட்ட பள்ளிகளில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் மத்திய அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவித்துள்ளது. கடந்த 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலின் போது வாக்கு சாவடி மையங்களாக பயன்படுத்தப்பட்ட பள்ளிகளில் ஏராளமான பொதுமக்கள் வந்து வாக்களித்தனர். இது தவிர கொரோனா நோயாளிகள் வாக்களிப்பதற்கு மாலை 6 மணி முதல் 7 மணி வரை ஒதுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வாக்குச்சாவடியாக செயல்பட்ட பள்ளிகளில் கிருமிநாசினிகள் தெளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக சிவகங்கை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் பிளஸ்- 2 மாணவர்களுக்கு 3-ஆம் தேதி முதல் பொது தேர்வு நடைபெற உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து வாக்குச்சாவடி மையம் செயல்பட்ட அறை, பள்ளி முகப்பு பகுதி, வரவேற்பு அறை, தலைமை ஆசிரியர் அறை மற்றும் பள்ளியைச் சுற்றிலும் தெளிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பள்ளி தலைமை ஆசிரியர்கள் இந்த பணிகளை நேரடியாக வந்து பார்வையிட்டனர்.