பிஸ்கட் பாக்கெட்டில் தலைமுடி இருந்ததால் அந்த நிறுவனத்திற்கு நீதிபதி 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பகுதியில் ஸ்ரீகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த நவம்பர் மாதம் அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் 10 ரூபாய் கொடுத்து பிஸ்கட் பாக்கெட் ஒன்று வாங்கியுள்ளார். அந்த பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து பார்த்தபோது அதில் தலைமுடி இருந்தது தெரியவந்துள்ளது. இதனை பார்த்த ஸ்ரீகுமார் உடனடியாக பிஸ்கட்டை தயாரித்த கம்பெனிக்கு வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அங்கிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீகுமார் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி பிஸ்கட் கம்பெனியின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி 25 ஆயிரம் ரூபாய் அபராதம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட ஸ்ரீகுமாருக்கு பிஸ்கட் தொகை 10 ரூபாய் மற்றும் வழக்கு தாக்கல் செய்ய செலவழித்த 5 ஆயிரம் ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.